menu






  இலக்கியம >> வெற்றி வேற்கை (நறுந்தொகை)

வெற்றி வேற்கை (நறுந்தொகை)

அதிவீரராம பாண்டியர்

 

இந்நூலை இயற்றியவர் கொற்கை நகரத்திலிருந்து ஆட்சி புரிந்த அரசர் அதிவீரராம பாண்டியன் என்பவர். இவர் பாண்டிய மரபினர். இவரை தென்காசிப் பாண்டியர் என்றும் கூறுவர். இவருடைய ஆட்சிக் காலம் 11-12ம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர். குருமூலமாக சிவ தீட்சை பெற்ற சிவபக்தர். இவர் இயற்றிய பிறநூல்கள் நைடதம், இலிங்கபுராணம், காசிக் காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி போன்றவை. இவருடைய சகோதரர் புலவர் வரதுங்க ராம பாண்டியன்.

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.

நூல் பயன்

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!

வாழ்த்து

வாழிய நலனே; வாழிய நலனே!

(சில பிரதிகளில் இப்பாடல் காணப்படவில்லை)

நூல்

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் 1

கல்விக்கு அழகு கசடு அற மொழிதல் 2

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் 3

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் 4

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை 5

வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் 6

உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல் 7

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் 8

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை 9

உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் 10

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் 11

குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் 12

விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் 13

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் 14

வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை 15

தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வானுற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழல் ஆகாதே 16

தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே 17

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் 18

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் 19

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர் 20

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர் 21

கொண்டோ ர் எல்லாம் பெண்டிரும் அல்லர் 22

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது 23

சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது 24

அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது 25

புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது 26

கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது 27

அடினும் பால் பெய்து கைப்பு
அறாது பேய்ச் சுரைக்காய் 28

ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே 29

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே 30

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே 31

சிறியோர் பெரும் பிழை செய்தனராயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிது 32

நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே 33

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே 34

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே 35

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே 36

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே 37

எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர் 38

அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும் 39

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று 40

 

பின்னே

Top

முன்னே