menu






 இலக்கியம >> கவிதை >>
  • வேண்டல்

    - மகுடேசுவரன்

முதலும் முடிவுமான
ஒரு தத்துவத்தை
எனக்கு உபதேசி.
அதன் பொருளில்
எனது இருள் முலைகள்
இல்லாது போக வேண்டும்.
எதிரில் குவிந்துள்ள செல்வங்களை
இனங்கண்டு போற்ற வேண்டும்.
எனது தனிமையின் குழிகளை
அதைக் கொண்டு அடைக்க வேண்டும்.
ஒரு பற்றுதல் இல்லாமல்
எத்தனை காலங்கள்
அனாதையாய் வாழ்வது?
ஒரு தத்துவத்தைப் பற்றிக் கொண்டால்
என் நிராதரவைத் தொலைத்து விடுவேன்.
ஒரு தத்துவத்தைப் புகட்டினால்
ஒளியின் காம்புகளில்
அருட்பால் அருந்துவேன்.
ஒரு தத்துவத்தை உபதேசியுங்கள்.