menu






 இலக்கியம >> கதை >> கடற்கரைக்குப் போகும் பாதை


கடற்கரைக்குப் போகும் பாதை
(திலகவதி)

வழக்கம்போல ஏராளமான கேள்விகளுடன், ஆஷாவை எதிர்பார்த்துக்கொண்டு வாசலில்தான் நின்றிருந்தாள். இந்த அம்மாக்களின் மனது விசித்திரமானது. குழந்தைக்கு எத்தனை வயதானாலும் அவர்கள் அம்மாக்களின் மடிக் குழந்தைகள். குழந்தைகள் எப்போதும் தவறு செய்பவை. சிந்திக்கத் தொ¢யாதவை. ஆகவே அவர்களுக்கு தீக்கும் பனிக்கட்டிக்கும் வித்தியாசம் தொ¢யாது. அவர்களை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கவனிக்க வேண்டும். அதிலும் பெண் குழந்தையாயிருந்தால் போச்சு யாராவது ஒருத்தன் கையில் அவளை ஒப்படைத்துவிட்டு அக்கடா என்று பெருமூச்சு விடும்வரை மடியில் கட்டிய நெருப்புதான் அவர்கள் படியிறங்கி தெருவில் நடந்தால், அவர்களுக்கு அபாயம் தருவதற்கென்றே சுற்றிக்கொண்டிருக்கும் எத்தனை ஆண் பிசாசுகளிடமிருந்து வெளியில் போகும் பெண்கள் தப்பித்து முழுசாகத் திரும்பி வர வேண்டுமே!
"எங்கடி போய் சுத்திட்டு வர்ரே?"
"சினிமா முடியவே ஏழாயிடுச்சும்மா. அதுக்கப்புறம் பஸ்ஸைப் புடிச்சி அடையாறிலே இருந்து வர வேணாமா?"
"தினமும் இதையேதான் சொல்றே அது என்னடி காலேஜ் தினமும் சினிமா காட்டிக்கிட்டு"
ஆஷாவுக்கு சி¡¢ப்பு வந்தது.

"எடிட்டிங் படிக்கிறதுக்குன்னே நான் சேர்ந்த திரைப்படக் கல்லூ¡¢ம்மா அது. அதிலே சேர்ந்தாச்சு. அங்க சினிமாதான் பாடம். அதைப் போட்டுக் காட்டித்தான் எங்களுக்கு கிளாசே நடத்துவாங்க இதைப் போய் கேள்வின்னு கேக்கறே"

"என்ன எழவோ, என்ன படிப்போ.. உலகத்துல இல்லாத படிப்பு"

பையை மேசை மேல் விட்டெறிந்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ஆஷா. முகத்தைக் கழுவுவதாகப் பேர் பண்ணிவிட்டு ரெண்டு கவளம் ரசஞ் சாதத்தை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு அறைக்குள் வந்தாள். கதவைச் சாத்திக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள்.

அது அவள் அறை. அவள் பாதுகாப்பாக இருக்கிற இடம். மனசை அன்று மாலை நடந்த நிகழ்ச்சிக்குத் திருப்பிக் கொண்டு வந்தாள். அந்த இளங்குளிர்காற்று வீசும் மாலைப் பொழுதும் திலீபனது அனுசரணையான நெருக்கமும், பக்கவாட்டில் தொ¢ந்த அவன் ஆகிருதியும், தெருவைப் படுத்திருக்கும் பெண்ணாக அவன் கற்பனை செய்து சொன்ன விதமும் அது வெறும் கற்பனையல்ல, நீதான் என்று உண்மையைச் சொன்ன விதமும், தன்னை அவனுக்குள் ஒரு மனைவியாகச் சீராட்டும் விதமும் ஒவ்வொன்றாகக் கடல் ஓரத்து அலைகளாக அவள் இதயத்தைத் தாலாட்டின.

ஆஷா தியேட்டரை விட்டு வெளியே வந்தாள். அன்று சூ¡¢யன் அஸ்தமித்த அந்தி மாலை நேரத்தில் ஏ.சி. அறையில் இருந்து வெளிவந்ததும் சட்டென்று வெம்மையான காற்று அவள் முகத்தை வருடியது. மனசுக்குள் அப்போது தான் பார்த்திருந்த படம் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. திலீப்பை எதிர்பார்த்தபடி பாதாம் மரத்தடியில் போய் நின்று கொண்டாள்.

திலீப் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டே வருவது தொ¢ந்தது. அவன் அணிந்திருந்த சில்க் குர்த்தா அவன் அளவுக்குச் சற்றே நீளமானது என்று பலமுறை அவள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். ஆனால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது அவனுக்குக் கச்சிதமாகவும் அழகாகவுமே இருப்பதாக இப்போது அவளுக்குப் பட்டது. சில பொருட்கள் கொலாஜ் ஓவியம்போல தூரத்தில் வைத்து மட்டும்தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் முழு கனபா¢மாணமும் தொ¢யும்.

படத்தின் கதாநாயகி ஓர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவள் ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஆறு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டிய கட்டுப்பாட்டை வற்புறுத்துகிற கீழ், மத்திய தர வகுப்பைச் சேர்ந்த பெண் ஆறு மணியாகி, ஏழும் ஆகி, எட்டும் ஆகிறது. அவள் இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டின் சீதோஷ்ண நிலை மாறுகிறது. அண்டை அயலார்களுக்கு சுவைத்துப் பேசுவதற்கு மாலை நேரங்களில் சிற்றுண்டியுடன் சேர்த்து மென்றபடி வம்பளப்பதற்கு மேலும் ஒரு நொறுக்குத் தீனி. நெடுநேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை. அந்தப் பெண்ணுக்கு என்னவாகி இருக்கும்? எதுவும் ஆகி இருக்கலாம். குடும்பத்தார் பதைப்பின் உச்சத்தில் இருந்தார்கள். கடைசியில் அவள் வந்துவிடுகிறாள். அவள் வந்தது கடைசி பஸ். அவள் எங்குதான் சென்று திரும்பியிருப்பாள். அது நமக்குத் தேவையில்லாத விஷயம். தவிரவும் அது அவளது சொந்த விஷயமும் கூட. டைரக்டர் எழுப்பியிருந்த பிரச்சனையின் கனபா¢மாணமே வேறு. பெண்ணின் நிலை குறித்தும், பெண்ணின் சுதந்திரம் பற்றியும், பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கிற அபிப்பிராயங்கள் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றியுமே டைரக்கடர் உக்கிரமாகக் குரல் எழுப்பியிருந்தார்.

திலீபன் அவள் அருகில் வந்து நின்றான்.

"உன்னோட அடுத்த புரோகிராம் என்ன? வீட்டுக்கா அல்லது வேறு எங்காவதா?"

"தலையை வலிக்குது திலீப். ஒரு காபி சாப்பிட்டா தேவலை போல இருக்குது"

திலீப் கணப்பொழுது யோசித்தான்.

"ம்... இப்ப எங்க போகலாம்?"
"டிரைவ் இன்னுக்கு"
"திலீப் ரொம்ப நல்ல படம்... இல்லே?"
"டைரக்ட் பண்ணது சென் இல்லியா? கேக்கணுமா?"
"எனக்கு என்னவோ அவருடைய மத்த படங்களை விட இது ரொம்ப பிடிச்சிருக்கு"
ம்... ஏன்? அப்படி பிடிக்கப் பண்ண காரணம் என்னவாக இருக்கும். இது பெண்கள் பிரச்சனைங்கறதனாலேயா?
"இருக்கலாம். ஆனால் அது மட்டும் காரணம்னு எனக்குத் தோணலை ஆமா.. அதென்ன பிரச்சனைகளிலே ஆண் பிரச்சனை, பெண் பிரச்சனை ஒரு பெண் விதித்த நேரத்திற்குமேலே வீட்டுக்கு வெளியே இருக்க நேர்ந்திடிச்சின்னா அதைப் பிரச்சனையாக பண்றது பெரும்பாலும் ஆம்பளைங்கதானே? அதனாலே அது ஆண்கள் பிரச்சனையும் கூட இல்லியா?"

திலீபன் புன்னகை பு¡¢ந்தான். அவளுக்குப் பெருமையாக இருந்தது. அவளுக்குத் தொ¢யும். அவள் அப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்வதில் உடைத்துப் பேசுவதில் அவனுக்குப் பி¡¢யம். அவனே சொல்லியிருக்கிறானே.

"காபியை சாப்பிடு. சீக்கிரம்.. ஆறிடப் போகுது?"

"நான் சொன்னதுக்கு மொதல்ல பதில் சொல்லுப்பா" ஆஷா கைப்பையிலிருந்த தலைவலி மாத்திரையை எடுத்து விழுங்கினாள். எனக்கென்னவோ வக்கிர மனசுடைய சமூகத்தின் மேல மிருணாள் சென்சொடுக்கின சாட்டைதான் இந்தப் படம்னு தோணுது. பொதுவாக சராசா¢ மனித மனம் வசந்தங்களையும், வம்புகளையும் நேசிக்குதோன்னு எனக்குத் தோணுது. அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கிற நேரம் நம்ம சுபாவத்திலேயே இருக்கிறது. நாம் நம்மைச் சுற்றி இருக்கிற நம்முடைய சொந்தப் பிரச்சனைகள் குறித்து கவலைப்படறதைக் காட்டிலும் பிறத்தியார் பிரச்சனைகளை, நடவடிக்கைகளைக் கவனிக்கறதிலையும் அவைகளுக்கு நாம் விரும்பக்கூடிய அர்த்தங்களை ஏற்றுவதிலேயும் நம்முடைய பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறோம். இதைத்தான் சென் அவருக்கு உ¡¢ய சினிமா பாஷையில் சொல்லியிருக்கிறார்."

"அது அந்தக் கதாநாயகிக்கு மட்டும் நேருகிற விஷயம் இல்லை. எனக்கும் என்னை மாதி¡¢ எத்தனையோ பெண்களுக்கும் நடக்கிற விஷயம்தான். இப்பப்பாரு இந்நேரம் எங்க அம்மா வாசலுக்கு வந்து என்னை எதிர்பார்த்துக்கிட்டிருக்கும். என்னைப் பார்த்ததும் ஏன் லேட்டுன்னு தாமதமா வந்ததுக்கு காரணம் கேக்கும். ஆறு மணிக்கு காலேஜ் முடிந்திருக்குமே? இத்தினி நேரம் எங்கே போனேங்கும்? யாரோடு பேச்சிகிட்டிருந்தேன்னு கொத்துக் கேள்விகளை தயாரா வச்சுக்கிட்டு காத்திருக்கும். அதுக்கு வேண்டியது அதும் மனசை திருப்திபடுத்துகிற பதிலுங்க உண்மையோ இல்லையோ அதனோட அலை வா¢சைக்கு நான் இயங்கியாகணும். சென் இந்தப் படத்தை எனக்காகவும்தான் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியே நான்தான்."

தேர் யூ ஆர்.. இப்ப சொன்னியே ஒரு வார்த்தை... இப்படி உன்னை சொல்ல வச்சுதே இந்தப் படம். அதுதான் ஒரு படத்தின் வெற்றி. இதன் அர்த்தம் படத்தோடு உன்னையும், என்னையும் அடையாளம் கண்டுகொள்ள முடியுதே அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

மீதியுள்ள காபியை அவன் குடித்து முடித்தான். பிறகு சொன்னான்.
"ஆஷா! வீட்டிலே உனக்குச் சிரமமா இருக்கா? இந்த ஒரு வாரமாக நீ உற்சாகமாகவே இல்லை. என்ன பிரச்சனை? சொல்லேன்".

"அவள் தலையைக் குனிந்துகொண்டு மேசையில் தன் விரல் நகத்தால் சித்திரம் வரைந்துகொண்டிருந்தாள்.
"நடந்துகிட்டே பேசலாமே" என்று அவள் சொன்னாள்.

அவர்கள் வெளியே வந்தார்கள். மணி ஏழாகி விட்டிருந்தது. தார்ரோட்டின் மேல் விழுந்த தெருவிளக்கின் வெளிச்சம் மஞ்சளாய்ப் பரவி மஞ்சள் புடவை, கருப்பு ஜாக்கெட் அணிந்த ஒரு பெண் படுத்துக்கிடப்பது போல அவனுக்குத் தோன்றியது. தன் கற்பனையைத் தானே ரசித்து அவன் சி¡¢த்துக் கொண்டான்.

என்ன சி¡¢ப்பு?
சொன்னான்.
தார்ரோடு கூட உங்களுக்குப் பெண்ணை ஞாபகப்படுத்துதா?
யாரைன்னு கேக்கலையே நீ?
யாரை?
உன்னைத்தான்
அவள் சட்டென்று நின்றாள்
ஏய்! நான் படுத்திருக்கறதை நீ எப்பவாவது பாத்திருக்கிறியா என்ன?
பார்த்தாதானா? கற்பனை பண்ணிக்க முடியாதா?
ஓஹோ! இன்னும் வேற என்னென்ன கற்பனை பண்ணியிருக்கே?"
அவன் மெளனமாக நடந்தான்.

அவன் எதையாவது பேச மாட்டானா என்று அவளுக்கு இருந்தது. ஆனால் ஏடாகூடமாக கண்டதையும் பேசிவிடக் கூடாதே என்றும் இருந்தது. அப்படி அவனுக்கு அருகே நடந்து போவது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. தலைவலி கூட மறைந்து போனது. இருட்டறையில் சட்டென்று வெளிச்சம் பரவியது மாதி¡¢ இருந்தது. மழைக்காலத்து மண்வாசனை மாதி¡¢. எங்கோ தூரத்துக் கோவிலில் இருந்து விட்டு விட்டுக் கேட்கிற நாதஸ்வர ஆலாபனை மாதி¡¢. குளிர்ந்த நீரோடையில் முதல் மூழ்கல் மாதி¡¢. விடிகாலை நேரத்து சன்னல் ஓரத்துப் பயணம் மாதி¡¢ அவனுடன் பேசியபடி நடப்பது அவளுக்கு சுகமான அனுபவமாக இருந்தது.

பஸ் வரும்வரை நின்று அவளை ஏற்றி வழி அனுப்பி வைத்துவிட்டு அதன் பின்னர்தான் திலீபன் புறப்பட்டான். ஒருவன் இருக்கிறான். அவன் இனி அவளுடைய இனிய துணைவன்.

மீண்டும் அந்த மாலை அவள் பார்த்த சினிமாக் காட்சியின் கதாநாயகி நினைவுக்கு வந்தாள். அவள் எங்கு போயிருப்பாள்? டைரக்டர் சொல்லவில்லை. காட்சி முடிந்தபின் நடைபெற்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் இதே கேள்வியை எத்தனையோ தடவை கேட்ட போதும் அவர் புன்னகை மாறாத முகத்துடன், "நானும் உங்களோடு உட்கார்ந்துதானே அந்தப் படத்தைப் பார்த்தேன். எனக்கு மட்டும் எப்படித்தொ¢யும்? என்று சொல்லிவிட்டார். ஆனால், அவளுக்கு மட்டும் அது தொ¢யும். அந்தப் படக் கதாநாயகிக்கு திலீபனைப் போல ஒரு சிநேகிதன் இருப்பான். அவனுடன் அவள் சென்றிருப்பாள். எங்கு போயிருப்பார்கள் அவர்கள்? கடற்கரைக்குப் போயிருப்பார்கள். அல்லது ஆற்றங்கரைக்குப் போயிருப்பார்கள். இருள் படர்ந்த ஒரு தோப்புக் குள்ளும் அவர்கள் பிரவேசித்திருக்கலாம்.

அவளுக்கு வெட்கமாக இருந்தது. ஏனோ கூச்சமாக இருந்தது. அப்படியெல்லாம் நினைக்கக்கூடாதென்று ஏதோ ஒன்று சொல்லியது. ஆனாலும் அப்போதைய மனநிலைக்கு அப்படி நினைத்துப் பார்ப்பது அவளுக்கு சந்தோஷம் தந்தது. அதே உணர்வுடன் அவள் உறங்க முயன்றாள். உறக்கம் வெகுநேரம்வரை அவளுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

வகுப்பு முடிய ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவள் எடிட்டிங் அறையில் இருந்து வெளிப்பட்டு திலீபனைத் தேடிச் சென்றாள். அவன் சகுந்தலாவுடன் புன்னை மரத்தின் கீழ் பேசிக் கொண்டிருந்தான். அவள் தயங்கித் தயங்கி அவனைக் கூப்பிடுவதா வேண்டாமா என்ற யோசனையில் ஆழ்ந்தாள். அதற்குள் அவனே அவளைப் பார்த்துவிட்டான். அவளை நோக்கி வந்தான். புறப்பட்டாச்சா?

ஆச்சு உன்னோட வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா? போகலாமா?
அவன் ஒரு கணம் நிதானித்தான். சா¢ போகலாம் வா என்றபடி ஆஷாவுடன் புறப்பட்டான்.
அவர்கள் கல்லூ¡¢ வாசலுக்கு வெளியே வந்தார்கள். அவர்களுக்கு முன்னால் பாதை இரு கிளைகளாகப் பி¡¢ந்து கிடந்தது. ஒன்று பஸ் நிறுத்தத்திற்குப் போகும். மற்றது கடற்கரைக்கு எந்தப் பாதையில் பயணம் செய்வது என்பதை அவர்கள் இப்போது தீர்மானம் செய்தாக வேண்டும்.

எங்கு போகலாம்? என்றான் அவன்.
எங்க வேணும்னாலும்
டைம்தான் நெறய இருக்கே பீச் வரைக்கும் போனால் என்ன?

அவள் சம்மதித்தாள். கள்ளிப் புதர்களும், சப்பாத்தியும் இருபுறமும் மண்டிய ரஸ்தாவின் ஊடாக அவர்கள் சென்றார்கள். இரவின் வருகையை அவர்களால் பார்க்க முடிந்தது. வெள்ளை ஜமுக்காளம் வி¡¢த்த மாதி¡¢ இருந்த கடற்கரையின் மணற்பரப்பில் அவர்கள் ஒரு படகின் மறைவில் உட்கார்ந்து கடல் நீலத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். சலனமற்ற பாத்திரத்துத் தண்ணீராக ஆஷாவின் மனம் பேரமைதியில் ஆழ்ந்தது. உணர்ச்சிகளின் உச்சமே சாந்தம்தானே? எல்லா உணர்ச்சிகளுக்கும் அதுதானே ஆரம்பம்.

அவன் அவள் கைகளைப் பற்றினான். அவள் தன் கைகளை விடு வித்துக் கொள்ள முயலவில்லை. தன் தனியறைக்குள் இருப்பது போல ஒரு பாதுகாப்பு உணர்ச்சி அவள் நெஞ்சினை நிறைத்தது. அவனுடன் இருக்கையில் அவளுடைய அச்சம், தயக்கம், கூச்சம், எல்லாமே சுவடு தொ¢யாமல் அழிந்து போகிறது. உடைந்த ஊற்றுக்கண்கள் திறந்து கொள்வது மாதி¡¢, மணல் சுவா¢ல் கசியும் நீர் மாதி¡¢ அவளும் மெல்ல மெல்ல இளகத் தொடங்கினாள். கவிழந்திருந்த அவள் முகத்தைத் தொட்டு நிமிர்த்தினான் திலீபன்.

என்ன?
ஒவ்வொரு கண்ணும் ஒரு கடல் மாதி¡¢. ஆக மொத்தம் மூணு கடல்
அவள் அவனைப் பார்த்து அழகாகச் சி¡¢த்தாள். அவன் அவள் தோளைப் பற்றினான். வானம் இருட்டாகத்தான் இருந்தது. அங்கங்கே பொத்தல் கம்பளம் போல் நட்சத்திரங்கள் கடல் ஒரு அரக்கனைப் போல் வாய் பிளந்து கூச்சலிட்டது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக கடலில் குதிக்கிறார்கள். ஆழ ஆழப் புதைக்கிறார்கள். கடலின் அடி ஆழத்தையே அவர்கள் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவா¢ல் ஒருவர் கரைந்து கொண்டிருந்தார்கள்.

மாயவரத்தில் இருந்து திலீபனின் மாமா வந்திருந்தார். சீவல் பாக்கும், கும்பகோணம் வெற்றிலையும், துவைத்துத் துவைத்துக் காவியேறிய வேஷ்டியுமாக இருக்கிற மாமாவுக்கு வாழ்க்கையில் இரண்டு லட்சியங்கள். தான் இளமைக் காலத்தில் கண்டது போன்ற, நிறைந்து பெருகும் காவோ¢யை மீண்டும் காண வேண்டும். இரு கரைகளையும் நிறைத்து கரைகளை உடைத்துக்கொண்டு நுங்கும் நுரையுமாகச் சுழித்துக்கொண்டு ஆவேசமாகப் பிரவகிக்கிற காவி¡¢யைப் பார்க்க வேண்டும். அடுத்தது உறவுக்காரர்களில் கல்யாண வயது ஆண் பெண் அனைவருக்கும் திருமணம் செய்வித்துப் பார்க்க வேண்டும். முதல் லட்சியத்தை நிறைவேற்றுவது அவர் கையில் இல்லை. ஆகவே மருமகனுக்கு எப்படியும் ஒரு பெண்ணைத் தேடிப்பிடித்து வரும் தை மாதத்தில் கல்யாணத்தை முடித்து விடுவது என்று காப்புக் கட்டிக்கொண்டு வந்திருந்தார்.

திலீபன் கல்லூ¡¢க்குப் புறப்படும் அவசரத்தில் இருந்தான்.

மாப்பிள்ளை ஒரு நிமிஷம்.. அம்மா ஜாதகம் குடுத்துருக்கு. வேட்டைக்குப் புறப்படறேன். பொண்ணு எப்படி இருக்க வேணும்ன்னு மட்டும் சொல்லு. மத்த கவலையை எங்கிட்ட விடு. ஈரேழு லோகத்திலே அவ எங்கே இருந்தாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டார்ரது என் பொறுப்பு.

திலீபன் வாட்சைப் பார்த்தான்.

என்ன மாமா நீங்க? பொறப்படற நேரம் பார்த்துக் கேட்கறீங்க? இதுல நான் சொல்லறதுக்கு என்ன இருக்கு மாமா? நல்ல பொண்ணா குடும்பப் பாங்கா இருக்கணும். அம்மாவுக்குக் கைவேலையிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணும். பொ¢யவங்க பேச்சுக் அடக்கமா இருக்கணும். அதிர்ந்து பேசாத. அதிர நடக்காத நல்ல பொ¢ய குடும்பத்துப் பொண்ணா பாருங்களேன். அப்புறம் முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. பொண்ணுக்கு படிப்பு கிடிப்பெல்லாம் வேண்டாம்.

என்னப்பா சொல்றே? நீ இந்தக் காலத்துப் பையன். உன்னளவுக்கு படிச்ச பொண்ணா இருக்கும்னு சொல்லபோறேன்னில்ல இருந்தேன்.

படிச்ச பொண்ணுங்க லட்சணமெல்லாம் தொ¢யும் மாமா. அதனால தான் சொல்றேன். படிப்பு இல்லாதவ போதும்.