menu






  இலக்கியம >> நன்னெறி

நன்னெறி

சிவப்பிரகாச சுவாமிகள

 

எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம்-எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை. 21

ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க-நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு. 22

பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பல்கால்
எறும்பு ஊரக் கல் குழியுமே! 23

உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி. 24

கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள். 25

உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்-மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு. 26

கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று. 27

முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை. 28

உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான். 29

கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்!
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு. 30

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்!
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது. 31

பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான். 32

எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல். 33

அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு. 34

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம். 35

தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர்-எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய். 36

பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் கொல்
பொன் உயர்வு தீர்த்த புனர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. 37

நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம். 38

கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம். 39

பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண். 40
 

பின்னே

Top

முன்னே