இடம் ஒன்றில்
இருக்கமுடியாது அவர்களால்.
எங்கே காணவில்லை-என்று
அழைத்தாலல்ல,
நினைத்தால் ஓடிவருவார்கள்.
தவளையாட்டம் என்று சொல்லித்
தத்துவார்கள்.
ஏதோ பறவைகள் கூவுவதாய்
ஒளிந்துகொண்டு குரல் கொடுப்பார்கள்
எங்கள் கண்ணாடியைக் கழற்றுவது,
அதுவும் எதிர்பாராத சமயங்களில்
முடியைப் பிடித்து இழுப்பது
பேனாவை, புத்தகத்தைப் பிடுங்குவது
இவை படுத்துபவை ஆகா..
பங்கு பெறுவது!
எதை ஒளித்து வைக்கிறோமோ
அதைத்தான் தேடி எடுத்திருப்பார்
மீட்பது என்பது...
ராஜதந்திர யுத்தம்!
"செடி கொடிகளுக்குப்
பூக்கள் தாம் கலகலப்பான அமைதி"
பட்டாம் பூச்சிகளைப்பற்றி என்ன சொல்ல...
அவைதாம் பேரப்பிள்ளைகள்!