|
13 ரூபாய் இளநீரும்
என் 13 வருட ஆயுளும்
- வேலம். கிருபாகரன்

ரோட்டோர கடையில்
நீ ஒருநாள்
குடித்துவிட்டு வீசிய
இளநீர் குடுக்கையை
குப்பைகள் துழாவி
கவனமாக
எடுத்துப்போகும் என்னை
ஏற இறங்கப் பார்க்கிறான்
கடைக்காரப் பையன்
ஒருவேளை
என்னைப் பற்றி அவன்
நினைத்திருக்கக் கூடும்...
புத்தி மாறிப் போன
மனிதன் இவனென்று!
மட்டை சீவி
பழக்கப்பட்டவன்
என்
மனசறியக் கூடுமோ?
நீ
பதிமூன்று ரூபாய் கொடுத்து
குடித்துப் போட்ட
இளநீரில்
என்
பதிமூன்று வருட ஆயுள்
இருக்குமென்ற உண்மை
எப்போது புกขயுமோ?
குறிப்பு : குடித்துப்போடும் இளநீர் மட்டையை 'குடுக்கை' என்று தமிழ்நாட்டின்
வடமாவட்டங்களில் பரவலாக சொல்வதுண்டு.
|