|
ஆக்ஸிஜன் நினைவுகள்
எப்போதுமே குனிந்திருக்கும் உன்
முகம் பார்த்த பிறகுதான்
நிமிர்ந்தது என் கற்பனை
கண் மூக்கு செவி செவ்வாய்
இவற்றால் ஆனதல்ல உன் முகம் என
விளங்கிக்கொள்ள வெகு நாளானதெனக்கு
நீ சிந்திய வார்த்தைச் சொட்டுகள்கூட
காற்று கண்ணயந்தபோது
கண் திறந்தவை
அசைவுகளற்ற உன் மெளனத்தின்
மரண வாசனை எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது
வேண்டாம் வேறெதுவும் சொல்லிவிடாதே
உன் மெளனச் சிலுவையிலிருந்து
உயிர்த்தெழுகிறது
என் வாழ்வு
- நாகூர் ரூமி
|