menu






 

ஆரஞ்சு நிறப் பந்து

எதிர்பார்ப்புகள்
எப்போதும்
இனிமையாகவே இருக்கின்றன
வீட்டுக்கு வந்த
புதிய மருமகள்
வழங்கும்
சர்க்கரை தூக்கலான
காபியைப் போல்!


காலாவதியாகி விட்டது
சிலேட்டு
பல்பம்
நாளை கணினியும்...
புதுசாய்
ஏதேனும் சொல்!


முதுகுக்குப் பின்னால்
பேசுகிறவர்கள்
உலகத்தில்
ஊனமுற்றவர்கள் என்று
தனியாக யாருமில்லை


விதை வாங்கப் போன
அய்யன்
பிணமாக வீடு திரும்ப
திடீரென
முடிவுக்கு வந்தது
காளியண்ணனின் காதல்


அப்பா சட்டை
போட்டுக்கொண்டால்
மீசை முளைக்குமா?


நீண்ட தூரப் பயணங்களில்
எப்படியோ
தட்டுப்பட்டு விடுகிறது
கிழக்கிலோ மேற்கிலோ
ஆரஞ்சு நிறத்தில்
சூกขயப் பந்து!


- பா. தீனதயாளன்