|
நகரம்

ஊர் ஆலமரத்தின் கீழ்
வடை விற்ற பாட்டி
இன்று நகர நடைபாதையில்
காய்கறி விற்கிறாள்
இப்போதும்
கவ்வ வருகிறது காக்கை
கையில் லத்தியுடன்
குழந்தைகள் - காப்பகத்தில்
பெற்றோர்கள் - முதியோர் இல்லத்தில்
பிளாஸ்டிக் வண்ணத்துப் பூச்சிகளை
சுவா¢ல் ஒட்டிவைத்துவிட்டு
மனிதர்கள் பறக்கிறார்கள்!
கிணற்றில் விழுந்த நிலவைத்
தூக்கிவிடத் துடித்த மனசு
மின்சார ரயிலில்
பக்கத்தில் பிணம் கிடக்க
பதற்றமேயின்றி
பட்டாணி கொறித்துப்
பயணம் போகும்!
எங்கெங்கு காணினும்
வான்முட்டும்
வணிக வளாகங்கள்
இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்
எங்கே
ஒரு மனித வளாகம்?
- நா.வே. அருள்
|