|
உன் ஈரப் பார்வையினால் ஈரமாக்கி விடுவாயா?
உன் அன்பின் அடிச்சுவடுகளை
என் உள்ளத்துக்குள் சுமந்தபடி
தொலைதூர தேசமொன்றில்
தன்னந்தனியே நான்
எட்டாத தொலைவில்
ஏக்கங்கள் நிறைந்து கொள்ள
தவித்தழுகின்றது மனசு
தந்திகள்
அறுந்த வீணையாய்
நாதத்தினை
எப்படி நான் வாசிக்க முடியும்?
உன்னுடைய நினைவுகள்
எப்போதும் என்னை
ஓர் பந்தாய் நினைத்து
உதைத்து விளையாட...
உன் முகத்தை
எப்போதுமே
என் இதயத்தில்
ஓவியமாய் வரைந்த படியே...
நான் தனிமையில் இருந்து
என் யாசகத்தின்
வாசகத்தை
ஜோசித்துப் பார்க்கின்றேன்.
நீ இல்லாமல் போனதால்
எப்போதுமே
தனிமைச் சோகமொன்றுக்குள்
நானும்
தனியாய் தவித்துப் போகின்றேன்.
அகதி வாழ்க்கைக்குள்
அமிழ்ந்து போன நாள் முதல்
கீறல்கள், காயங்களால்
இதயச் சோலைக்குள்
நிறையவே இரத்த வடுக்கள்.
உறக்கமற்ற விழிகள்
உணர்வற்ற உதடுகள்...
இவற்றையெல்லாம் உனக்குக் கூறி
உன்னையும் வேதனைக் கடலுக்குள்
மூழ்கடிக்க விரும்பவில்லை.
காற்றுத் தொடுகையிலும்
ஏன்
தூங்கையிலும் கூட
உன் பாசத்தை உணர்ந்தபடி...
நேசமற்ற மனங்கள் கொண்ட
மனிதக் கூட்டத்துக்குள்
நானும் நடைப்பிணமாய்
நின்று கொண்டு
நேசக்கரம் நீட்டி
உன்னை ஆசையுடன் அழைத்தேன்
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
உன் வரவுக்காய்
என் உதிரத்தைப் பிழிந்து
உனக்காய் பாதை போட்டிருந்தேனே!
நீ ஏன் வரவில்லை?
உன் மடியில்
மீண்டும்
நான் ஓர் குழந்தையாகி
என் பூர்வீக சோகங்களை எல்லாம்
சொல்லிச் சொல்லி
விம்மி அழும்போது
என் தலை கோதி
நீ தரும் ஆறுதலுக்காய்
நானும் காத்துத் தவமிருந்தேனே?
வறண்டு போன பூமிக்கு
வானம்
மழை தூவ மறுத்தது போல்
நீயும் மறுத்து விட்டாய்
இனி நான்
யாกขடம் போய்
என் சோகங்களைச் சொல்லியழ...?
சோகங்களைச் சுமந்து
சுதிமறந்த
இந்தச் சுமைதாங்கியும்
ஓர் நாள்
சுமை தாங்க முடியாமல்
இதயம் வலித்து
சொட்டுச் சொட்டாய்
இரத்தம் சிந்தி
தள்ளாடும் போது...
யாருமில்லாத ஓர் இடத்தில் நின்று
கனத்த என் மனதின் ஓலங்களை
கண்ணீரோடு
கவிகளாய் பாடுவேன்.
நீ வாழும் தேசத்திற்கு
ஈரக் காற்றோடு கலந்து வரும்
என் கண்ணீกขன் கோலங்கள்
உன் நெஞ்சோடு பேசும்
அப்போதாவது
உலர்ந்து போன
என் வாழ்வை
உன் ஈரப்பார்வையினால்
ஈரமாக்கிவிடுவாயா.....?
நட்போடு வலம் வரும் இவள்
சத்தியா.
|