|
மறுபடியும் அழைத்திடாயோ...?

பத்துத் திங்கள் என்னை
பக்குவமாய் சுமந்தவள் நீ!
உதிரம் கொடுத்து என்னை
உயிராக வளர்த்தவள் நீ!
சுமைகள் தனைக் களைந்து
இமையாய்க் காத்தவள் நீ!
வெண்ணிலவு தூங்கையிலும்
கண்ணிரண்டு திறந்திருந்து
என் விழி மூட
தலை கோதி
உன் மடி சாயவைப்பாய்.
இமையின்
ஒவ்வொரு இமைப்பொழுதும்
உள் பாசமான வருடல்களால்
பாசமழை பொழிந்தவளே!
எங்கு போகும் போதும்
எனை துணையாய் அழைத்தவளே
சொர்கம் செல்கையிலே - நீ
சொல்லாமல் சென்றதேனோ?
செத்தது எந்தன் மனம்
சமாதியானது என் சந்தோசம்
பாசத்தின் வேரதுவும்
பாதியிலே அறுந்ததினால்
ஆற்றுவார் யாருமின்றி
அமைதியாய் அழுகின்றேன்
உலகத்து உறவெல்லாம்
உயிர்த்தெழுந்து வந்தாலும்
உன்னுறவு போல்
எந்தனுக்கு இருந்திடுமா?
அழுகையின் ஓசையதும்
உன் காதில் ஒலித்துவிட
அம்மா நீ விழித்துதெழுந்து
மகளே!
என்றென்னை
மறுபடியும் அழைத்திடாயோ?
ஒரே ஒரு முறை
மகளே!
என்றென்னை
மறுபடியும் அழைத்திடாயோ?

உங்களுடன்...
சத்தியா.
|