menu






  இலக்கியம >> கட்டுரை
இலக்கிய பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?

சொல்லாமல் சொல்லி உணர்த்துவது கலையின் முக்கியமான ஒரு அம்சம். மிகை என்பது ஜெயகாந்தன் எழுத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம். ஜெயகாந்தன் ஆ, ஓ, ஜயோ, ஆஹா என்பன போன்ற வியப்புச் சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார். பாத்திரங்களின் வாயிலிருந்து இதுபோல வந்தாலாவது பொறுத்துக் கொள்ளலாம். கதாசிரியரே அடிக்கடி ஆ, ஓ-வும் போட்டுக்கொண்டிருப்பதை எப்படித் தாக்குவது? ஜெயகாந்தன் எல்லாவற்றையும் சொல்லுகிறார். அடுக்கடுக்கான விளக்கங்கள் கொடுத்துக் கொண்டே போகிறார். கணநேர பலவீனத்தால் ஏற்படும் நேர்மைப் பிறழ்வு பற்றிய கதை 'தவறுகள் குற்றங்கள் அல்ல' (தலைப்பே பாதிக் கதையைச் சொல்லி விடுகிறது) தற்செயலாக நேர்ந்துவிட்ட இரண்டு பிறழ்வுகள் கதையில் காட்டப்படுகின்றன. அந்தப் பிறழ்வுகள் குற்றங்கள் அல்ல என்பதை விளக்கும் சொற்பொழிவு தவணை முறையில் தரப்படுகிறது. விஷயம் முடிந்த பிறகும் விளக்கம் தொடர்கிறது. வழக்கம்போல ஒரு பொன்மொழியோடு முடிகிறது. 'போர்வை' கதையும் அது முடிய வேண்டிய இடத்திலிருந்து வெகுதூரம் சென்று, மேலதிகமான விளக்கங்களைத் தந்து, பொன்மொழி ஒன்றை உதிர்த்துவிட்டுதான் முடிகிறது. வெகுஜன இதழ்களிலேயே பெரும்பாலும் இயங்கிவந்த இவர் இப்படி எழுதுவதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்படிப்பட்ட எழுத்தை இலக்கியத்தரமான எழுத்து என்று சிலர் கொண்டாடுவதன் காரணத்தைத்தான் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயகாந்தனின் கதாபாத்திர வார்ப்பு பற்றியும் அவற்றின் வகைமாதிரி பற்றியும் அதிகம் சொல்லப்படுகிறது. சமூகத்தில் சகல மட்டங்களில் உள்ளவர்களும் அவரது கதைகளில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் அவரது பக்த சிகாமணிகள். பரமஏழை, பரம்பரைப் பணக்காரன், மேல்சாதிக்காரன், கீழ்ச்சாதிக்காரன், பிச்சைக்காரன், விபச்சாரி, கலைஞன், கன்னியாஸ்திரி, எழுத்தாளன், சாமியார், விவசாயி, அரசியல்வாதி, சினிமாக்காரன் என்று பலரும் அவர் கதைகளில் வந்துபோவது உண்மைதான். அதுபோலவே கதைகளில் பேசப்படும் விஷயம் என்று எடுத்துக் கொண்டால் நவபாரதி முன்னுரையில் குறிப்பிடுவது போல விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை குழந்தைகளின் உலகம். பெண் சுதந்திரம் போன்ற 'எல்லாம்' ஜெயகாந்தன் "தொட்டவைதான்"
ஜெயகாந்தன் கதைகளில் பலதரப்பட்ட மாந்தர்களும் வந்துபோகிறார்கள். அழுத்தமாக உருப்பெருவதில்லை. எல்லாப் பிரச்சினைகளையும் ஜெயகாந்தன் தொடுகிறார் ஆழமாக போவதில்லை. வறுமையின் சித்தரிப்பு என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டால் கு. அழகிரிசாமிய்¢ன் திரபுரம் வறுமைப்பற்றி பேசும் ஜெயகாந்தனின் எந்தக் கதையை விடவும் அழுத்தமாகவும் யதார்த்ததகவும் ஆழமாகவும் உருப்பெற்றிருக்கிறது. குழந்தைகளின் உலகம் என்று எடுத்துக்கொண்டால் சுந்தர ராமசாமி (ஸ்டாம்பு ஆல்பம். பக்கத்தில் வந்த அப்பா) அசோகமித்திரன் (வாழ்விலே ஒரு முறை) ஆகியோரின் கதைகளில் வரும குழந்தைகள். இயல்பாகவும். அழுத்தமாகவும் சினிமாத்தனமான அதிகப் பிரசங்கிதனம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஜெயகாந்தன் கதைகளில் ஒரு ழுழந்தையையும் இப்படிப் பார்க்க முடியவில்லை.
வர்க்க முரண்களையும் வறுமையின் குரூரத்தையும் பற்றிக் கதை எழுதுவது ஜெயகாந்தனுக்கு அல்வா சாப்பிடுவது போல ஆனால் அவரது 'ஆகிவந்த'களமான இதில் கூட ஜெயகாந்தனை விடவும் பலமடங்கு கலை நேர்த்தியுடனும் வலுவுடனும் கரிச்சான் குஞ்சு செயல்பட்டிருக்கிறார். பாலியல் பிறழ்வுகள் ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றைக் கு.ப.ராஜகோபாலனும் தி. ஜானகிராமனும் கையாளும் விதத்தோடு ஒப்பிடுகையில் ஜெயகாந்தன் மிகவும் பரிதாபமாகத் தெரிகிறார். ஜி. நாகராஜன் கதைகளில் வெளிப்படும் இருட்டு உலகத்தின் நம்பகத்தன்மையும் கூர்மையும் ஜெயகாந்தன் கதைகளில் இல்லை. மனிதர்களின் வேஷங்கள், போலித்தனங்கள், ஆகியவற்றை ஜெயகாந்தன் சத்தமாக, வெளிப்படையாக, ஒற்றைப்பா¢மாணத் தன்மையோடு பேசுகிறார். ஆதவனோ மிக இயல்பாக மிகக் கூர்மையாக, நுட்பமாக இவ்விஷயங்களை அணுகுகிறார். தொடுவதும் பேசுவதும் முக்கியமல்ல எப்படித் தொடுகிறார் எப்படிப் பேசுகிறார் என்பதே முக்கியம்.

ஜெயகாந்தன் பிரச்சினைகளை இயல்பாகச் சித்தரிப்பதில்லை. அரசியல், தத்துவம், சார்ந்த தீர்வு என்ற குறுகலான சூத்திரத்திற்குள் பிரச்சினைகளைத் திணிக்க முயல்கிறார்;. நேர்மையற்ற நோக்கத்திற்காக நடத்தப்படும் வேலைநிறுத்தத்தில் பங்குபெற மறுக்கும் துணிச்சலும் தார்மீக உணர்வும் கொண்ட ஒரு தொழிலாளியைக் 'கருங்காலி' என்ற கதையில் சித்தரிக்கிறார். ஆனால் அதை முன்னெடுத்தச் செல்லும் துணிச்சல் இல்லாமல் சூத்திரக் கயிற்றுக்குள் கதையைக் கட்டிப் போடுகிறார். ஏழை*பணக்காரன், பழைமை*புதுமை, பிற்போக்குத்தனம்*முற்போக்குத்தனம், ஆகிய கறுப்பு*வெள்ளைச் சூத்திரங்களுக்குள் இவரது பிரச்சினைகள் சிக்கிக் கொள்கின்றன. 'இரண்டு குழந்தைகள்' 'குறைப்பிறவி' 'செக்ஷன் நம்பர் 54' ஆகிய கதைகள் இப்படிப்பட்டவை அப்பட்டமாக கோஷம் எழுப்பும் உண்ணாவிரதம். மலிவான சென்டிமென்டின் உதாரணங்களான 'கேவலம் ஒரு நாய்' தோத்தோ சூத்திரத்திற்கேற்ப பின்னப்பட்ட போனவரும் பொங்கலப்போ ஆகியவை பிரசினைகள் மற்றும் பாத்திரங்களின் மொண்ணையான ஒற்றைப் பரிமாணச் சித்தரிப்புகள் . இந்தக் காரணங்களால் தான் ஜெயகாந்தன் கதைகளின் பாத்திரப் பிரதிநிதித்துவம் பற்றியோ, பிரச்சினைகளின் பிரதிநிதித்துவம் பற்றியோ மெச்சிக் கொள்ளப் பெரிதாக எதுவும் இல்லாமல் போகிறது.
 

பின்னே

Top

முன்னே