|
இலக்கிய பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?
'கெட்டுப்போன' பெண்ணுக்கு விமோசனமே இல்லை என்று கருதும் சமூகத்தின்
பொதுப்புத்தியில் இந்த முடிவு சில அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. ஆனால் இந்த அதிர்ச்சி கருத்து ரீதியிலான ஒன்று 'விதிவசத்தால்
கெட்டுபோன' பெண்களைப் பற்றி கட்டுரை சாதித்துவிடக் கூடிய ஒரு தாக்கம் இது.
படைப்புக்கலையின் ஆதாரமான வேலை அல்ல இது. படைப்பு இதே கேள்விகளை மேலும் நுட்பமான
ஆழமான தளங்களிலும் எழுப்பி அதன் முலம் வாசகப் பிரக்ஞையில் ஆழமான சலனங்களை எழுப்பும்.
புதுமைபித்தனின் 'சாப விமோசனத்தோடு 'இந்தக் கதையை ஒப்பிட்டுப் பேசுகிறார் நவபாரதி.
புதுமைப்பித்தன் கதையில். உன்னைத் தீக்குளிக்கும்படி இராமனா கேட்டான் என்று
சீதையிடம் கேட்கும் அகலிகை ராமன்தான் கேட்டான் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி
விடுகிறாள். ராமனின் பாதம் பட்டதால் அகலிகையாக மாறிய கல் சீதையின் 'தூய்மையை
நிரூபிக்க' ராமன் தீக்குளிக்கச் சொன்னான் என்பதை அறிந்ததும் மறுபடியும் கல்லாக
மாறுகிறது. இந்த இடத்தில் புதுமைப் பித்தன் எழுப்பும் கேள்விகளும் சலனங்களும் மிக
ஆழமானவை. 'அக்கினிப் பிரவேசம்' எழுப்பும் சலனங்களோ அந்தப் புரட்சித் தாயின்
கையிலிருக்கும் குடத்தின் அடி மட்டத்தைத் தாண்டாதவை.
மேலும் 'புரட்சிகரமான தீர்வை' முன்வைக்கத் துடிக்கும் ஜெயகாந்தனால் பிரச்சினையின்
மாறுபட்ட பரிமாணங்களைப் பார்க்க முடியவில்லை. பாலியல் குற்றங்களில்
பாதிக்கபடுபவர்களின் பங்கு பற்றிச் சொல்ல அவருக்கு எதுவும் இல்லை. ஜெயகாந்தனின் 'அக்கினி
பிரவேச'த்திற்கு எதிர்வினையாக ஜி. நாகராஜன் எழுதிய 'அக்கினி பிரவேசம்' ஜெயகாந்தன்
கதையின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதுடன் மேற்படி பிரச்சினையின் கூடுதலான
பரிமாணங்களைக் கூர்மையாகக் கவனப்படுத்துகிறது.
பண்பாட்டுத் தளத்தின் மேற்பரப்பில் எழுப்பப்படும் சலனங்களும் முக்கியமானவைதாம்.
ஆனால் ஜெயகாந்தன் இதைக் கூடச் சார்புகளற்ற நிலையில் இருந்து செய்வதில்லை. மேலே
குறிப்பிட்டுள்ள கதைகளில் (சுயதரிசனம், அந்தரங்கம் புனிதமானது முதலானவை) ஜெயகாந்தன்
ஒழுக்கவியல் கோட்பாடுகள் மீதான தனது விமர்சனத்தை முன்வைக்கிறார். ஆனால் அவர் ஒரு
தரப்பில் நின்று கொண்டு பேசுகிறார். ஏற்கெனவே நம்பப்பட்டும் கடைபிடிக்கபட்டும் வரும்
ஒரு பார்வையை மறுத்து மறுதரப்புப் பார்வையை மறுதரப்பின் சார்பாக முன்வைக்கிறார். இது
முழுக்க முழுக்கக் கருத்தியல் தளத்திலான செயல்பாடு. கற்பிலிருந்து கஞ்சா மகாத்மியம்
வரை பல விஷயங்கள் பற்றியும் ஜெயகாந்தனுக்குச் சொல்வதற்கு இருக்கின்றன. தாராளமாகக்
சொல்லட்டும்.
ஆனால் இதற்காகச் சிறுகதை என்ற கலை வடிவத்தை எதற்காக வம்புக்கு இழுக்க வேண்டும்.
ஜெயகாந்தன் பேசிக்கொண்டே இருக்கிறார். பாத்திரங்கள் மூலமாகப் பேசுகிறார். மாலை
நேரங்களில் முச்சந்திகளில் அரசியல்வாதிகள் மேடையில் முழங்குகிறார். பண்டிகை
நாட்களில் பேராசிரியர்கள் பட்டிமன்றங்களில் முழங்குகிறார்கள். சாலமன் பாப்பையாவும்
சுகிசிவமும் ஞானசம்பந்தனும் ஆளுக்கொரு தொலைக்காட்சியில் தினமும் பேசிக்கொண்டே
இருக்கிறார்கள். அவர்களுக்குப் பேசித் தீரவில்லை. ஜெயகாந்தனும்
பேசிக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா மீது ஜெயகாந்தன் தன் படைப்புகளில் வாயிலாகவும் படைப்புகளுக்கு
வெளியிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.உதாரணமாக. 'பித்துகுளி என்ற
கதையில் இலக்கியத்தரமான கதைகளைவிட அசட்டுக் கதைகளையே விரும்பும் ஒரு கோமாளி 'புரட்யூசரை'ஜெயகாந்தன்
சித்தரித்துத் தமிழ் சினிமாவின் போக்கைப் பரிகசிக்கிறார். இந்தப் பரிகாசம் வெகுஜன
இதழ்களில் வெளியாகும் சில சினிமா விமர்சனங்களின் தரத்தில்தான் இருக்கிறது. தமிழ்
சினிமாவில் நாகேஷ். சோ போன்ற நகைச்சுவை நடிகர்கள் சினிமாவுக்குள்ளேயே இதுபோன்ற
விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். 'பித்துகுளி' முன்வைக்கும் விமரசனத்தில்
புதிதாகவோ தீவிரமானதாகவோ எதுவும் இல்லை என்பது ஒருபுறம் இருக்க. இந்தக் கதை உள்பட
ஜெயகாந்தனின் பல கதைகள் வெகுஜன தமிழ் சினிமா சூத்திரத்தின் அடிப்படையிலேயே
இயங்குகின்றன என்பதுதான் முக்கியம் . பட்டணம் சிரிக்கிறது. பூ வாங்கலையோ. ராசா
வந்துட்டாரு. கேவலம் ஒரு நாய். என்று பல கதைகளில் திருப்பங்களும் சென்டிமென்டுகளும்
தமிழ் சினிமாவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. இவரது மிகையான வர்ணனைகளும்,
செயற்கையான அழுத்தங்களும் உரத்த குரலும் சிவாஜி கணேசனை நினைவுபடுத்தகின்றன. தமிழ்
சினிமாவைக் கடுமையாக விமர்சித்து, அந்த விமர்சனத்தின் மூலமாக வெகுஜனப் பார்வையில்
தன் ஆளுமையை வளர்த்துக் கொண்ட ஒருவர் தனது படைப்புகளில் அதே தமிழ் சினிமாவின்
அடையாளங்களைக் கொண்டிருப்பது ஒரு நகை முரண்.
|