கீதாசாரம்
-சீ.வி.வடிவேலு
பின்னிரவில் சடையப்ப தெருவில் ஒரு டசன் குடித்தனங்களோடு அந்த குறுகலான சந்து
இருண்டு போயிருந்தது. ஓரமாய் குடிநீர் குழாய் ஒன்று. மேல் உறுப்புகளையிழந்து
ஊனமாய் நின்றிருக்க எதிரேயிருந்த அச்சிறிய வீட்டிற்குள் பொருட்கள் அனைத்தும்
சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு மூலையில் கிடத்தப்பட்டிருந்தன. இறுதியாய் சமையல்
பாத்திரங்களை மூட்டைக்குள் சப்தமில்லாமல் திணித்துக் கொண்டிருந்த கெளசல்யா,
"நாளைக்கு அந்த ஆளுகிட்ட பேசி, கொஞ்சம் டைம் கேட்டுப் பார்த்தா என்ன?... இந்த
இராத்திரி வேளைல எங்கப் போயி?" என்று வினவினாள்.
"வாயைமூடிக்கிட்டு இரு. நாளைக்கு காலைல வட்டியோட வாங்கின கடன் மொத்தத்தையும்
கட்டியாகணும். நூறு, இருநூறு இல்ல. இருபதாயிரம் இருக்கா உங்கிட்ட?" என்று சேகர்
கேள்வியை கோபத்தோடு திருப்பியதும்,
"எல்லாத்தையும்தான் கழட்டி கொடுத்திட்டேனே! ரேசு, குடின்னு அழிச்சாச்சி. மஞ்சக்
கயித்துல கொசுருக்கு கொஞ்சம் தங்கம் வொட்டிட்டிருக்கு அதையும் கொடுத்திடறேன்.
வித்து நல்லா குடிச்சிட்டு..."
கெளசல்யாவிற்கு மேலே வார்த்தைகள் எழாமல் நாக்கு தழுதழுத்தது. கண்கள் கலங்கின.
"ஏய்.. இன்னா சும்மா பெனாத்திட்டிருக்கே. உன்ன இன்னா அனாதையா விட்டுட்டா
போயிட்டேன். கூட கூட்டில்ல போறேன்."
கத்தியபடி தள்ளாடிக் கொண்டே வாசலுக்கு சென்றான் சேகர். ஒன்றும் புரியாமல்
மலைத்துப் போய் நின்றிருந்த குழந்தை மேகலாவைப் பார்த்தாள் கெளசல்யா. பாவமாய்
தோன்றியது. இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டாள்.
கெளசல்யாவின் விழிகளில் முட்டி நின்ற கண்ணீர் கன்னத்தை நனைத்தது. வடிந்து
கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்தபடி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 12.30 ஐ கடந்து
போயிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகள் அ??த்தும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தன.
விடிந்ததும், விடியாததுமாய் பக்கத்து வீட்டு மாமி, "இந்தாடி கெளசல்யா நீ
கொடுத்த பாரதியோடக் கவிதைகள்"ன்னு வந்து நின்னு, காணி நிலத்துல நீ அண்டர்லைன்
பண்ணியிருந்த வரிகள் படு சூப்பர்ன்னு சொல்லிட்டு, "கொஞ்சம் கருவேப்பிலையும்,
மிளகாய் பொடியும் கொடேன்"ன்னு அசடு வழிய கேட்டு வாங்க ஆளில்லாமல் ஏமாந்துப் போகப்
போறா.
இத்தனை நாளாய் சின்னச் சின்ன கொடுக்கல், வாங்கலோடு அப்ப, அப்ப சிரிச்சிப் பேசி
அந்நியோன்யமாய் பழகிட்டு சொல்லிக்காமல்கூட நடுராத்திரிலே வீட்டை காலி பண்ணிட்டு
போறத நினைச்சு கெளசல்யா துவண்டுப் போனாள்.
"அம்மா" என்று அழைத்த மேகலாவின் கண்கள் சோர்ந்திருந்தன.
"என்ன மேகலா?"
"தூக்கம்"
"வேறு வீட்டுக்குப் போறோம்மில்ல அங்க தூங்கலாம்," என்று கதவருகே வந்த கெளசல்யாவின்
பார்வை வாசல்வரை எட்டிப் பார்த்தது. சந்தில் அப்பிக் கொண்டிருந்த இருளை ஊதியபடி
நெருப்புத்துளி ஒன்று கனன்று கொண்டு வருவது தெரிந்தது. வாயில் சிகரெட்டோடு வந்து
நின்றான் சேகர்.
"வண்டி கொஞ்ச நேரத்துல வந்துரும். கட்டி முடிச்சிட்டியா? "என்று பரபரத்தான்.
கெளசல்யா அவனை ஏறிட்டாள்.
பார்த்த மாத்திரத்தில் அவனிடம் மனதைப் பறி கொடுத்து, டெலிபோனாய் அடித்து,
கடிதங்களாய் எழுதி, பெரியதொரு யுத்தங்களுக்கிடையே உறவுகளையெல்லாம்
அறுத்தெறிந்துவிட்டு மண முடித்து, நான்கு ஆண்டுகள்கூட சரியாய் நகரவில்லை. தலை மேலே
பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரி. சேகர் இவ்வளவு மோசமாய், மொடாக்
குடிகாரனாய்ப் போயிட்டானே என்று அவளுடைய மனசு முணுமுணுத்தது.
கல்யாணமான சில மாதங்களிலேயே சின்ன விஷயங்களுக்குக் கூட தடைகள் விதிக்கப்பட்டு.
அனுமதிகள் மறுக்கப்பட்டபோது மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து
ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் உள்ளுக்குள் அழுதிருக்கிறாள் கெளசல்யா.
ஒரு குதிகுதித்து ஆர்பாட்டம் பண்ணாலும் பரவாயில்லை. கேட்டுட வேண்டியதுதான்'
என்கிற முடிவோடு,
"எங்கள கூட்டிட்டு எங்கப் போறீங்க?" அத மொதல்ல சொல்லுங்க" என்றாள்.
சேகரின் கால்கள் தரையில் பதியாமல் தள்ளாட்டத்திலிருந்தன. சிகரெட்டை நன்கு
இழுத்துவிட்டு தூர வீசி வன்புகையை மென்று முழுங்கினான்.
"மெட்றாச விட்டேப் போறாம். பக்கத்துல இரும்புலியூர் இல்ல அங்கதான். வீடெல்லாம்
அங்க செட் அப் பண்ணிட்டேன். நீங்க இரண்டுப் பேரும் கவலையே படாதீங்க."
நாக்கு குழறியபடி. தன்னுடைய பேன்ட் பைக்குள் கையை விட்டான். கையோடு விஸ்கி
பாட்டில் ஒன்று வெளியே வந்தது. நிலைமை விபரீதமாய் போவதையுணர்ந்த கெளசல்யா. அவன்
கையிலிருந்த பாட்டிலை பிடுங்க முயற்சித்தாள்.
"ஏய்! பாட்டில விடு" என்று கத்தினான் சேகர்.
"சத்தம் போடாதீங்க! பக்கத்துல எழுந்திடப் போறாங்க!! ஏற்கனவே குடிச்சிருக்கறது
போதும். பாட்டில முதல்ல குடுங்க என்று அவனோட போராட. மறுபடியும் அவன் கத்தியதும்.
எங்கே அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் விழித்துக் கொள்வார்களோ என்கிற அச்சத்தில்
சேகரின் கையை உதறிவிட்டு விலகி கொண்டாள்.
விஸ்கிப் பாட்டிலைத் திருகித் திறந்தவன். அதை அப்படியே வாயில் மடமடவென்று
கவிழ்த்துக் கொண்டான்.
அதே தருணம் சரசரவென்று யாரோ வருகிற காலடித் சப்தம் கேட்டது.
சேகர் வெளியே எட்டிப் பார்த்தான். நடுத்தர வயதில் ஒரு ஆள் நின்றிருந்தான்.
"இன்னா வண்டி வந்தாச்சா?"
"ம் வந்தாச்சு"
"சீக்கிரம் எல்லா சாமான்களையும் ஏத்து" என்றான் சேகர் வந்தவன் ஒவ்வொரு பொருளாக
எடுத்துச் சென்று டெம்போவில் ஏற்றத் தொடங்கினான்.
"குடியேறப் போற வீட்டோட வாடகை எவ்வளவு இருக்கும்?" என்று யோசித்த
கெளசல்யாவிற்கு அப்பொழுதுதான். இருக்கிற வீட்டிற்கே இரண்டு மாத வாடகை
பாக்கியிருப்பது நினைவிற்கு வந்தது.
"இந்த மாசமாச்சும் எப்படியாவது வாடகையை கொடுக்கறதப் பாரும்மா. இன்னும் இரண்டு
நாள்ல வர்ரேன். ரெடி பண்ணி வச்சிக்க." என்று ஆர்பாட்டமில்லாமல் சொல்லிவிட்டுப்
போன வீட்டின் சொந்தக்காரர் கண்முன்னே தோன்றி மறைந்தார்.
வாடகையைக் கூட கொடுக்காமல் இப்படி ஈனத்தனமாய் ஓடி ஒளிவதை எண்ணி கூனிக் குறுகிப்
போனாள் கெளசல்யா.
"கிளம்பு, கிளம்பு...ம் சீக்கிரம்," என்று அதட்டிய சேகர். வெளியே சென்று
வண்டியில் ஏறிக்கொண்டான்.
சுற்றும் முற்றும் பார்த்தாள் கெளசல்யா. வீடு சுத்தமாக காலியாகிருந்தது. ஈசான
முலையில் அகல் விளக்கு மாடத்தருகே ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த கீதாச்சாரம்
கண்களில் பட்டது.
"எது நடந்ததோ. அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ. அது நன்றாகவே நடக்கிறது." என்று தொடங்கின, அதன் வரிகள்.
அதே கணம் வரை வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருப்பவைகளை மனசுக்குள் சற்று அசை
போட்டாள்.
கீதாசாரம் மீது கோபம் வந்தது. அதனைக் கூடவே எடுத்துச் செல்லலாம் என்றிருந்தவள்.
யோசனையோடு நின்றாள். கீதாசார அட்டையை ஆணியிலிருந்து கழட்டித் திருப்பினாள். அதன்
பின்பக்கத்தில்,
"சூழ்நிலைக் காரணமா சொல்லிக்காம வீட்டை விட்டுப் போறேன். மன்னிச்சிடுங்க. இரண்டு
மாச வாடகையை இன்னும் ஓரிரு மாசத்துல எப்படியாவது உங்ககிட்ட சேர்த்திடறேன்.
இப்படிக்கு உண்மையுடன்
கெளசல்யா'.
என்று எழுதி பார்வையில் படுமாறு மறுபடியும் ஆணியில் தொங்கவிட்டாள்.
நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த பாரம் சற்றுக் குறைந்து, லேசானதுபோல் ஒரு உணர்வு
கெளசல்யாவை ஆட்கொண்டது. நிம்மதிப் பெருமூச்சோடு மேகலாவை அழைத்துக் கொண்டு, வீட்டை
விட்டு வெளியே வந்தாள். நின்றிருந்த டெம்போவிற்குள் தன்னை திணித்துக் கொண்டாள்.
குலுங்கலோடு வண்டி கிளம்பியது.
தூக்கக் கலக்கத்திலிருந்த மேகலா."நீ எப்பம்மா தூங்குவ?" என்று கேட்ட
குழந்தையின் பரிவு கெளசல்யாவின் உள்ளத்தை நெருடியது.
அகன்ற வீதியை தவழ்ந்து. ஓரமாய் அடர்ந்து நின்ற வேப்ப மரத்தோரத்தில் ஒதுங்கிய
பூங்காற்று கெளசல்யாவைத் தொட்டுச் சென்றது.