menu






 சிறுவர் பக்கம ்>> பறவைகளும் குஞ்சுகளும்

பறவைகளும் குஞ்சுகளும்

ஒரு நெல் வயலில் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வந்தது. கூட்டில் குஞ்சுகளும் இருந்தன. நெல் முதிர்ந்து அறுவடைக்குத் தயாராயிற்று. ஆனால் குஞ்சுகள் பறக்கும் நிலைமையை அடையவில்லை. இதனால் பறவை ரொம்பக் கவலை கொண்டிருந்தது. தான் இரை தேடப் போயிருக்கும்போது அறுவடை ஆரம்பித்துவிட்டால் தன் குஞ்சுகளின் கதி என்ன ஆகும் என்று கலங்கியது. ஒரு நாள் வெளியே போகும்போது, "யாராவது வயல் பக்கம் வந்து பேசிக்கொண்டிருந்தால் கவனமாய்க் கேட்டு வையுங்கள்" என்று சொல்லியது.

பறவை திரும்பி வந்தபோது குஞ்சுகள் தாயைச் சூழ்ந்துகொண்டு, "இன்றே எங்களை வேறு இடத்திற்குக் கொண்டு போய்விடு" என்று கெஞ்சின. என்ன காரணம் என்று பறவை கேட்டது. குஞ்சுகள், "தகப்பனும் மகனும் வந்தார்கள். நாளைக் காலை அறுவடை ஆகவேண்டும்; ஊராกขடம் சொல்லி அழைத்து வா என்று தகப்பன் சொன்னான். ஆகையால் எங்களை இப்பொழுதே கொண்டுபோய் விடு" என்றன.

தாய் : பயப்படாதீர்கள். ஊராரை அவர்கள் நம்பினால் நாளை அறுவடை ஆகப்போவதில்லை.

மறுநாள் பறவை சொல்லியபடியே ஒருவரும் அறுவடைக்கு வரவில்லை. மறுநாள் மாலை பறவை திரும்பி வந்தபோது, "யாராவது வந்தார்களா?" என்று கேட்டது.

குஞ்சுகள் : இன்றும் தகப்பனும் மகனும் வந்தார்கள். அறுவடைக்கு ஊரார் வரவில்லை. தகப்பன் மகனைப் பார்த்து, "நமது பந்துக்களிடம் சொல்லி நாளைக் காலை அறுவடைக்கு வரச் சொல்லு" என்று சொன்னான்.

பறவை : அவ்வளவுதானே? பந்துக்களை நம்பினால் நாளை அறுவடை ஆகப்போவதில்லை. நீங்கள் பயப்படாதீர்கள். நாளை என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

மறுநாள் மாலை பறவை திரும்பி வந்ததும் குஞ்சுகளிடம் கேட்டது.

குஞ்சுகள் : இன்றும் தகப்பனும் மகனும் வந்தார்கள். பந்துக்கள் ஒருவரும் வராததைப் பார்த்து தகப்பன் கோபம் கொண்டான். இனி இருவரையுமே நம்பக்கூடாது என்று சொன்னான். "இரண்டு அกขவாளைத் தயார் செய்துகொண்டு அதிகாலையில் வந்துவிடு. நாமே செய்து விடுவோம்" என்று மகனுக்குக் கூறினான்.

பறவை : அப்படியானால் இனிமேல் நாம் இங்கே இருக்கக் கூடாது. தானே செய்வது என்று முடிவு செய்துவிட்டால் வேலை நிச்சயமாக நாளை நடந்துவிடும்.

தாய்ப்பறவை தன் குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு வேறு இடத்திற்கு அன்றே போயிற்று.

தன் கையே தனக்கு உதவி.
                                       >> மேலும்